கொரிய சினிமா – ஹேண்ட்மெய்டன்

கொரிய சினிமா – ஹேண்ட்மெய்டன்
-தீஷா

விக்டோரியன் இங்கிலாந்து காலகட்டத்தில் ஒரு லெஸ்பியன் காதல் பற்றிய ஷாரா வாட்டர்ஸின் புகழ்பெற்ற நாவலான ஃபிங்கர்ஸ்மித் (Fingersmith), பார்க் சான் வூக் ( Park Chan-wook) அவர்களது இயக்கத்தில் 2016-ஆம் ஆண்டு ஹேண்ட்மெய்டன் (handmaiden) எனும் பெயரில் திரைப்படமானது. ஜப்பானியக் காலனியாக கொரியா இருந்தபொழுது நடக்கிற கதை, கொரிய திரைப்படப் பாணிகளுக்கேயுரிய த்ரில்லர் வகை கதைசொல்லலிலும் Chung Chung-hoon-ன் ஒளிப்பதிவிலும் திரைப்படத்தின் ஒவ்வொரு சட்டகமும் ஓவியத்தையொத்த பிரதிபலிப்போடு வெளிப்படுகின்றன. ஒரு நாவல் உண்டாக்கிய தாக்கத்தைத் தன் காட்சி ஊடகத்தின் மூலமும் கொண்டுவருவதற்கான முயற்சி, அதன் நேர்த்தியான பிம்பங்களை உருவாக்கிய விதத்திலேயே கண்டுணரமுடிகிறது.

வாழ்நாளில் ஒருவர் மற்றவரை ஏமாற்ற முயற்சிக்கிறோம். கணம் தோறும் ஏதாவதொரு காரணத்திற்காக நடித்துக்கொண்டேயிருக்கிறோம். மற்றவர் வருத்தப்படக் கூடாது என்பதற்காகவோ, தன் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவோ அல்லது மற்றவரை ஏமாற்றுவதற்கோ என ஏதோவொரு காரணத்திற்காக நடிக்கிறோம். ஆனால், இறுதியில் ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் யார் என்பதுதான் அடுத்தநொடி இதுவென அறியமுடியாத வாழ்க்கை தரும் ரகசியம். ஹேண்ட்மெய்டன் படத்தையே எடுத்துக்கொண்டாலும், அதனை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள முடியும். பார்க் சான் வூக்கின் கதை சொல்லல் பாணியும், இத்திரைப்படத்தை மூன்று பகுதிகளாகத்தான் பிரித்து அணுகுகிறது. 

Cannes: Competition Entry 'The Handmaiden' Best-Selling Korean ...

ஜப்பானிய ஆக்கிரமிப்பு கொரியாவில், ”ஃபுஜிவாரா” என்ற நபர், ’ஹிடெகோ’ எனும் உயர்குடும்பப் பெண்ணை மயக்கி, தன் ஆசையில் விழவைத்து, அவரது சொத்துக்களைத் தான் அனுபவிக்கத் திட்டமிடுகிறார். ஏதொரு திட்டமும் தனது ஒற்றை ஆள் முயற்சியில் மட்டுமே நடந்துமுடியாது, என்பதை உணர்ந்துகொள்கிற, ஃபுஜிவாரா, தன் திட்டத்திற்கு உறுதுணையாக சூக்-ஹீ என்ற பிக்பாக்கெட் அடிக்கும் ஒரு பெண்ணையும் கூட்டு சேர்க்கிறார். சூக் -ஹீ எனும் அந்தப் பெண்ணின் வேலையென்பது மிகச் சுலபம். சூக்-ஹீ, ஹிடொகோவின் அந்தரங்க உதவியாளாக வேலைசெய்ய வேண்டும். கிடைக்கும் நேரத்திலெல்லாம் ஃபுஜிவாரா பற்றிப் பேசி, ஹிடொகோவின் மனதில் காதல் வரவைத்து, அவ்விருவரையும் திருமணம் வரைக் கொண்டுசெல்ல வேண்டும். இதெல்லாம் நடந்தால், ஃபுஜிவாரா, ஹிடொகோவின் சொத்துக்களை ஆளமுடியும். தன் இத்தகைய திட்டங்களுக்கு உதவி செய்யும், சூக்- ஹீயிற்கும் கிடைத்த பணத்தில் கணிசமான தொகையைத் தருவதாக வாக்களிக்கிறார் ஃபுஜிவாரா. 

பணத்திற்காக ஆசைப்பட்டு சூக்-ஹீ, ஹிடொகோவின் உதவியாளாக வேலைக்குச் சேர்கிறாள். ஹிடொகோவிற்குத் துணை என்று இருப்பது அவரது வயதான மாமா மட்டுமே! எனவே, இத்தனிமையைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிற சூக்-ஹீ, ஹிடெகோவுடன் நெருக்கமாகப் பழகுகிறார். அந்தரங்க காரியதரிசி போல, உடன் இருக்கிறார். ஒரே படுக்கையில் படுக்குமளவிற்கு அவர்களிருவருக்கான நெருக்கம் அதிகரிக்கிறது. ஏனெனில், ஹிடொகோவிற்கு, பேய் கனவுகள் வருவதுண்டு. மரத்தில் தூக்குப்போட்டு இறந்துபோன அத்தையின் நினைவு இரவு பேயாக வருவதாகச் சொல்கிறாள். எனவே, அதுவும் சூக்-ஹீக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது.

எனினும், சூக் – ஹீ ஒவ்வொரு நேரமும், ஹிடெகோ, அதாவது தன் முதலாளிப் பெண் எவ்வளவு பாவமானவள் என்பதைக் குறித்துச் சிந்திக்கிறாள். ஏனெனில், ஹிடெகோவும், ஃபுஜிவாரா மீது காதல்வயப்படுகிறாள். ஃபுஜிவாரா, ஒரு நேர்மையற்றவன், அவன் ஆசைப்படுவதெல்லாம், ஹிடெகோ வைத்திருக்கிற அளவுக்கதிகமான சொத்துகள் மட்டுமே என்பது சூக்-ஹீக்குத் தெரியும். ஆனால், அதைச் சொல்லவும் முடியாமல், அதற்கு இணங்கவும் முடியாமல் தவிக்கிறாள். ஒரு கட்டத்தில் உண்மையாகவே, சூக்-ஹீ மற்றும் ஹிடெகோ தன் பாலுறவில் ஈடுபடுகின்றனர். கலவி சார்ந்து தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்கிற ஹிடெகோவிற்குத் தனக்குத் தெரிந்தவற்றைக் கற்றுத்தருகிறாள் சூக் – ஹீ. எவ்வித பாசாங்குமற்று நடக்கிற இந்தக் கலவியில் ஒருவரில் ஒருவர் கரைகின்றனர். இருவரது மனமும் கலக்கிறது. எனவே, ஹிடெகோ வேண்டுமென்றே, ஃபுஜிவாராவிடம் ஏமாறுவது சூக் – ஹீக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், திருமணம் முடிந்தபிறகு, ஹிடெகோவை ஒரு விடுதியில் சேர்த்துவிடுவதுதான் ஃபுஜிவாராவின் திட்டம். தானும் இந்தத் துரோகத்திற்குத் துணையாகயிருக்கிறோமேவென சூக்-ஹீ மனம் வெதும்புகிறாள். ஃபுஜிவாரா, ஹிடெகோவுடன் காதல் லீலை புரிகிறபொழுதெல்லாம், சூக்- ஹீயின் மனம் கலக்கமடைகிறது.

A Feminist Film Review: The Handmaiden -- The Radical Notion

ஹிடெகோவின் மாமா (கெளஸுகி) வசிப்பது ஒரு புத்தக அலமாரிகளுக்குள்தான். பெரும்பாலும் அவர் அங்குதான் இருக்கிறார். நூலகம் போன்ற அமைப்பில் இருக்கிற அந்த அறை முழுவதும் புத்தகங்கள். அது என்ன வகையான புத்தகங்கள் என்பது, கதையின் இரண்டாம்பாதியில்தான் தெரியவருகிறது. கெளஸுகி வணிக நிமித்தமாக ஒருவார காலம் வெளியே செல்வதால், இந்தச் சந்தர்ப்பத்தைத் தன் திருமணத்திற்கு ஆயத்தமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார் ஃபுஜிவாரா. சூக்-ஹீயும் அவர்களிருவருடன் செல்லும் இடங்களுக்கெல்லாம் உடன் செல்கிறார். 

அவர்களிருவக்குள்ளும் திருமணமும் நடந்துமுடிகிறது. ஃபுஜிவாரா, ஹிடெகோவின் பரம்பரைப் பணத்தைத் தன் படுக்கை முழுவதும் சிதறடித்து மகிழ்கிறான். அடுத்த நாள், ஹிடெகோதான் அந்த விடுதியில் தண்டிக்கப்படப்போகிறாள், என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், சூக்-ஹீ அந்த விடுதியில் சேர்க்கப்படுகிறாள். எனில், ஹிடெகோவும், ஃபுஜிவாராவும் கூட்டுக்களவாணிகள் போலச் செயல்பட்டு, சூக்-ஹீயை ஏமாற்றி, இப்படியான ஒரு சிக்கலில் சிக்கவைத்துள்ளனர். இப்போது நாம் ஆரம்பத்திலிருந்து பார்த்த கதையின் தன்மையே மாறுகிறது. இதுவரை ஏமாற்றியவர் ஏமாறுபவராகவும், ஏமாற்றுபவர் ஏமாறியவராகவும் மாறுகின்றனர். ஹிடெகோவின் அப்பாவித்தனத்தைப் பார்த்து வருத்தப்பட்ட சூக்-ஹீதான் உண்மையிலேயே அப்பாவி, அவள்தான் இத்தகைய சூழ்ச்சி தெரியாமல் சிக்கிக்கொண்டால் என்ற உண்மை வெளிப்படுகிறது. சூக்-ஹீயின் பெயர் உரிமங்களில் ஹிடெகோ என மாற்றப்பட்டு, ஹிடெகோவிற்குப் பதிலாக விடுதியில் தண்டனைகளை அனுபவிக்கத் தள்ளப்படுகிறாள். இதற்கான காரணம் என்னவென்பதை கதையின் இரண்டாம் பாதி தெளிவுறுத்துகிறது. 

The Handmaiden (2016) Movie Review | CineFiles Movie Reviews

பகுதி இரண்டில், ஹிடெகோவின் ஆரம்பகால வாழ்க்கையைப் பார்க்கிறோம். கதையின் முதல் பாதியில் தனக்கு செக்ஸ் சார்ந்து எதுவுமே தெரியாது என்று சொன்ன ஹிடெகோதான் தனது ஐந்து வயது முதலே, பாலியல் சார்ந்து உருவாக்கப்படுகிற ஆபாச புத்தகங்களையும், மோசமான சிற்றின்ப உணர்வெழும்பும் பாலியல் கதைகளையும் படிப்பதற்கு ‘வாசிப்புப் பயிற்சி’ அளிக்கப்பட்டவள். தன் மாமாவான கெளஸுகி மூலமாகவே இந்தப் பயிற்சி நடக்கிறது. ஹெடெகோவின் அத்தைதான் இதுநாள் வரையிலும் இப்படியான ஆபாசப் புத்தகங்களை வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார், ஆனால் அவரோ மர்மமான முறையில் தூக்கிட்டுக்கொண்டவுடன், அல்லது தூக்கிலிடப்பட்டவுடன், அந்த வாசிப்பு முறை ஹிடெகோவிற்கு வந்துவிட்டது. முதல் பாதியில் பார்த்த அந்த நூலகத்தில் இருக்கிற புத்தகங்கள் அனைத்தும் இந்தப் பாலுணர்வெழும்பும் புத்தகங்களின் தொகுதிதான். அந்தப் பெண் படிக்கப் படிக்க, சுற்றிலும் வயது முதிர்ந்த, பாதி வயதிலான ஆண்களெல்லாம் கூடியமர்ந்து தன் சிற்றின்ப ஆசைகளைப் போக்கிக்கொள்கின்றனர். ஹிடெகோ தன் இளம் வயது முதலே எத்தகைய உடல் ரீதியிலான மற்றும் மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது படத்தின் இரண்டாம் பாதியில் காட்சியாக்கப்பட்டிருக்கிறது.
 
The Handmaiden – FILMGRAB [ • ]

’தூக்கில் தொங்கியவர்களின் கண் விழி பிதுங்கியிருக்கும், நாக்கு வெளியே துருத்தியிருக்கும்’ என்று தன் அத்தை, தூக்கில் தொங்கியதற்கான காரணங்களை கெளஸுகியிடம் கேட்கிறபொழுது, ஹிடெகோவிடம் அந்தப் பாதாள அறையைக் காண்பிக்கிறார் கெளஸுகி. அவள் தப்பியோட முயன்றதால், இங்குதான் அவளைச் சித்திரவதை செய்து கொன்றதை காட்சியாகவே புரிந்துகொள்ள முடியும். அதனால், கெளஸுகி ஒரு வார காலம், வணிக வேலைக்காக வெளியே செல்கிறபொழுதும், ஹிடெகோவை அழைத்து, பாதாள அறையை மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார். இருப்பினும், இங்கிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று துணிந்துதான், ஹிடெகோ, சூக் – ஹீ மற்றும் ஃபுஜிவாரா மூவரும் தப்பியோடுகின்றனர். ஹிடெகோ மற்றும் ஃபுஜிவாராவின் திட்டத்தில் தெரியாமல் வந்து இணைந்துகொண்டவள்தான் சூக்-ஹீ. இப்போது இரண்டாம் பாதியில், சூக்-ஹீயின் நிலையைப் பார்த்தும், ஆபத்து புரியாமல் வந்து சிக்கிக்கொண்டிருக்கிற இந்த அபலைப் பெண்ணிற்காகவும் வருந்துகிறாள் ஹிடெகோ. ஒன்றுமறியாத பெண்ணை இப்படி ஏமாற்றப்போகிறோமே! என்ற எண்ணம் ஹிடெகோவின் மனதில் உறுத்துகிறது. 

Handmaiden (2016) – Movie Review – FoxyTurnip

ஹிடெகோவை மயக்கிக் காதலில் வீழ்த்துவது சாத்தியமற்றது என்பதை உணர்ந்த ஃபுஜிவாரா, அதற்குப் பதிலாக அவளைத் தப்பிக்க வைத்து, பின்னர் கிடைக்கிற செல்வத்தைச் சுருட்டிக்கொள்ளலாம் எனவும் திட்டமிடுகிறான். ஹிடெகோ தனது மாமாவைப் பற்றிய பயத்தை ஃபுஜிவாராவிடம் சொல்கிறபொழுது, நமது திருமணப் பரிசாக வேகமகாச் செயல்படும் விஷக்குப்பியை ஹிடெகோவிற்குத் தரப்போவதாகச் சொல்கிறான். இதனால், ஒருபோதும் அந்தத் துன்புறுத்தும் இடத்திற்கு உன்னை அவர் கொண்டுசெல்ல முடியாது என்று நம்பவைக்கிறான். இப்போதுதான், ஹிடெகோவின் இடத்தில் விடுதியில் தங்குவதற்காக, ஒரு பெண்ணை ஏற்பாடு செய்யவேண்டும், அவள் வேலைக்காரப் பெண்ணாகவும், தன்னைவிட்டு நீங்காதவளாகவும் இருக்கவேண்டும் என ஃபுஜிவாராவிடம் சொல்ல, அவரும் ஏற்பாடு செய்து அழைத்துவரும் பெண்தான் சூக்-ஹி.

ஆனால், ஹிடெகோ, சூக்-ஹியின் மீது உண்மையிலேயே காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் உன்னை ஏமாற்றுவதற்காகத்தான் இங்கு அழைத்துவந்திருக்கிறார்கள். ஏமாற்றப்படுபவள் நானல்ல, நீதான் என்ற உண்மையையும் சொல்கிறார் ஹிடெகோ. பின்னர், நூலகத்தில் இருந்த புத்தகங்களைக் கிழித்தெறிகிறாள் சூக்-ஹி. ஹிடெகோ, சூக்-ஹியைத் தன்னைத் தொல்லைகளிலிருந்து காப்பாற்ற வந்த ‘தேவதை’போலப் பாவிக்கிறாள்.

The Korean Movie of the Moment: The Handmaiden・ 

இதற்குப் பின்னான கதைதான், மூன்றாம் பகுதி. இரு பெண்களுக்குமே உண்மை தெரிந்துவிட, தண்டிக்கப்பட்டது யார்? என்பதும், இரு பெண்களுக்குமான வாழ்க்கை இனி எப்படித் தொடங்கப்போகிறது? என்ற கேள்விக்கான பதிலாகவும், மூன்றாம் பகுதி உள்ளது.  

2003-ஆம் ஆண்டு வெளியான ’ஓல்ட் பாய்’ திரைப்படம் மூலம், உலக சினிமா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த பார்க்- சான் – வூக்கின் இத்திரைப்படமும், கான் உட்பட சர்வதேச திரைப்பட விழாக்களின் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் ஒருசேரப் பெற்றிருக்கிறது.